படம் பார்க்க பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன்: ரிஷப் ஷெட்டி உருக்கம்

பெங்களூரு: பல மொழிகளில் வெளியாகி வெற்றிபெற்ற ‘காந்தாரா’ என்ற படத்தின் மூலம் பிரபலமானவர், ரிஷப் ஷெட்டி. இப்படத்தை எழுதி இயக்கி நடித்திருந்த அவர், தற்போது ‘காந்தாரா’ படத்தின் 2ம் பாகத்தை இயக்கி நடிக்கிறார். இந்நிலையில், நடிக்க வருவதற்கு முன்பு சந்தித்த சிரமங்கள் குறித்து உருக்கமாகப் பேசியிருக்கிறார். அது வருமாறு: சிறுவயதில் இருந்தே எனக்கு சினிமா என்றால் மிகவும் பிடிக்கும். சினிமாவில் நடிப்பு, இயக்கம் உள்பட ஏதாவது ஒரு துறையில் ஈடுபட்டு சாதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியமாக இருந்தது.

அப்போது தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க பணம் இருக்காது. குடும்ப சூழ்நிலை காரணமாக அப்பாவிடமும் பணம் கேட்க முடியாது. ஒரு கல்லூரியில் 2வது ஆண்டு படிக்கும்போது எல்லா வேலைகளையும் செய்து வந்தேன். தண்ணீர் கேன்கள் விற்றேன். ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டேன். ஓட்டலில் எடுபிடி வேலைகள் செய்தேன். அதன்மூலமாக கிடைத்த பணத்தை வைத்து திரைத்துறைக்குள் ஈடுபட்டு ஜெயிக்க முடியும் என்று நம்பினேன்.

அந்த நேரத்தில் சினிமா துறையில் யாருடனும் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. இந்நிலையில்தான், கன்னட நடிகர் ஒருவரின் வாழ்க்கை பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கிப் படித்தேன். உதவி இயக்குனராக இருந்து பிறகு முன்னணி நடிகராக வளர்ந்ததை அறிந்து, நானும் பிலிம் மேக்கிங் கோர்ஸ்சில் சேர்ந்து படித்தேன். பிறகு சில வருடங்கள் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன்.

எதிர்பாராத நிலையில் நடிகனானேன். கடந்த 2004ல் கன்னட திரையுலகில் நுழைந்த நான், பிறகு 2014ல் படம் இயக்கினேன். தொடர்ந்து 10 வருடங்கள் போராடியதற்கான பலன் இப்போது கிடைத்துள்ளது. தொடர்ந்து அந்த இடத்தை நான் தக்கவைத்துக் கொள்வதற்காக கடுமையாகப் போராடுகிறேன்.

The post படம் பார்க்க பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன்: ரிஷப் ஷெட்டி உருக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: