காணிப்பாக்கத்தில் பிரமோற்சவம் கோலாகலம் : கஜ வாகனத்தில் விநாயகர் பவனி

சித்தூர்: காணிப்பாக்கத்தில் பிரமோற்சவத்தையொட்டி கஜ வாகனத்தில் விநாயகர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று நடக்கும் ரத உற்சவத்தை காண பக்தர்கள் வருகை தந்துள்ளனர். சித்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலில் கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கியது. பிரமோற்சவத்தையொட்டி தினந்தோறும் பல்வேறு வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பிரமோற்சவத்தின் 5வது நாளான நேற்றுமுன்தினம் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், பிரமோற்சவத்தின் 6வது நாளான நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட கஜ வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கோலாட்டம், மயிலாட்டம் ஆடியபடி பங்கேற்றனர்.

பிரமோற்சவத்தையொட்டி கோயிலில் உள்ள மண்டபத்தில் பரத நாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு உட்பட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில், ஏராளமான கலைஞர்கள் நடனமாடினர். மேலும், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் நிர்வாக அதிகாரி ராமசாமி காணிப்பாக்கம் கோயில் பிரமோற்சவத்துக்காக பட்டு வஸ்திரங்களை தலைசுமையாக கொண்டு வந்து செயல் அலுவலர் பூர்ண சந்திரராவிடம் வழங்கினார். ரத உற்சவம் ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக கோயிலுக்கு வந்த கலெக்டர் பிரத்யும்னா சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு செயல் அலுவலர் பூர்ண சந்திரராவ் லட்டு பிரசாதம் வழங்கினார். இன்று நடைபெற உள்ள ரத உற்சவத்தை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து காணிப்பாக்கத்துக்கு பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதனால் காணிப்பாக்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Related Stories: