மறைந்த கலைஞர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்போம்: கார்த்தி பேச்சு

சென்னை: சமீபத்தில் மறைந்த திரைப்பட இயக்குனர் மற்றும் காமெடி நடிகர்கள் டி.பி.கஜேந்திரன், மனோபாலா, நடிகர் மயில்சாமி ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியை தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தியது. தி.நகரில் உள்ள தியாகராயர் அரங்கில் நடந்த இந்த நிகழ்வில் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், நடப்பு தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, பெப்சி துணை தலைவர் சுவாமிநாதன், திரப்பட கல்லூரி தலைவர் ராஜேஷ், இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் கார்த்தி பேசியதாவது: மறைந்த மூன்று பேருமே மக்களை மகிழ்வித்துள்ளனர். டி.பி.கஜேந்திரன் எப்போதுமே பாசிட்டிவ் எண்ணம் கொண்டவர். ஆளுமை மிக்கவர். மயில்சாமியுடன் ‘சிறுத்தை’ படத்தில் இணைந்து நடித்தேன்.

‘தனக்கு மிஞ்சி தான் தானம்’ என்று சொல்வார்கள். ஆனால் ஒரு மனிதன் கடன் வாங்கி தானம் செய்தான் என்றால் அது மயில்சாமி ஒருவராகத்தான் இருக்கும். என்னிடத்தில் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் தனக்காக எதுவும் கேட்கவே மாட்டார். யாராவது ஒருவருக்கு உதவி செய்வதற்காகத்தான் அவரது அழைப்பு வரும். எம்ஜிஆரின் கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து மறைந்துள்ளார். மனோபாலாவை பொருத்தவரை பல நிகழ்வுகளில் அவரே பொறுப்பை எடுத்துக் கொள்வார். எந்த பிரச்சினை வந்தாலும் அன்று இரவே அழைத்து அதை சமரசமாக முடித்து வைப்பார். எல்லோருடனும் தொடர்ந்து நட்பில் இருப்பார். மூன்று பேரையும் மிஸ் பண்ணுகிறோம். அவர்களது குடும்பங்களுக்கு நிச்சயம் நாங்கள் துணை நிற்போம். இவ்வாறு கார்த்தி பேசினார்.

The post மறைந்த கலைஞர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்போம்: கார்த்தி பேச்சு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: