விருது விழாவுக்கு என்னை அழைக்கவில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம்

சென்னை: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம், ‘ஃபர்ஹானா’. இதில் ஜித்தன் ரமேஷ், அனுமோல், ஐஸ்வர்யா தத்தா, கிட்டி, செல்வராகவன் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபா கரன் இசை அமைத்துள்ளார். இஸ்லாமிய பெண் சமுதாயக் கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு, கால்சென்டருக்கு வேலைக்குச் செல்லும் கதை கொண்ட இப்படத்தில் நடித்தது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது: கடந்த ஆண்டு நான் நடித்த தமிழ்ப் படங்கள் அதிகமாக வெளியாகவில்லை.

வருடத்தின் கடைசியில் ‘டிரைவர் ஜமுனா’ படமும், ‘சுழல்’ வெப்தொடரும் வெளியானது. இந்த ஆண்டு வாரம் ஒரு படம் வெளியாகிறது. படங்கள் வெளியாவதற்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. நான் நடித்த ‘க.பெ/ ரணசிங்கம்’ படத்துக்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், ஒரு விருது கூட கிடைக்கவில்லை. விருது விழாக்களுக்கு என்னை அழைக்கவும் இல்லை. இது எனக்கு அதிக வருத்தத்தை அளித்துள்ளது. ‘ஃபர்ஹானா’ படக்கதையை நெல்சன் வெங்கடேசன் சில வரிகளில் சொன்னார். ‘கதை பிடித்தால் சொல்லுங்கள். மேற்கொண்டு டெவலப் செய்கிறேன்’ என்றார்.

அதற்குள் கொரோனா ஊரடங்கு வந்தது. அடிக்கடி அவரிடம் இக்கதையைப் பற்றி விசாரிப்பேன். பிறகு படப்பிடிப்பு தொடங்கியது. எனது திரைப்பயணத்தில் இது எனக்கு மிகச்சிறந்த ஒரு படமாக இருக்கும். அதற்காக நான் நடித்த மற்ற படங்களைப் பற்றி குறைகள் சொல்கிறேன் என்று அர்த்தம் இல்லை. ஒருசில படங்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். இது அதுபோல் ஒரு படம். ‘ஃபர்ஹானா’ பற்றி தவறான கருத்து கொண்டிருப்பவர்கள், படம் வெளியான பிறகு பார்த்து தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள் என்பது உறுதி.

The post விருது விழாவுக்கு என்னை அழைக்கவில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: