ரம்ஜான் பண்டிகையையொட்டி அணை பூங்கா, அவதானப்பட்டி பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

கிருஷ்ணகிரி: ரம்ஜான் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ரம்ஜான் பண்டிகையினையொட்டி பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதலே விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவினையொட்டி, பல்வேறு நகரங்களில் இருந்து முஸ்லிம்கள் தங்கள் சொந்த ஊருக்கு குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அவ்வாறு விடுமுறைக்காக வந்தவர்கள் மற்றும் அண்டைய மாவட்டங்களான தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் அண்டைய மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் நேற்று கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லம், கிருஷ்ணகிரி அணையில் உள்ள பூங்கா உள்ளிட்ட இடங்களில் குவிந்தனர்.

இதனால், இந்த சுற்றுலா தளங்களில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா தளங்களில் குவிந்திருந்த பொதுமக்களின் வசதிக்காக தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. அதில் குழந்தைகள் ஏராளமானோர் குவிந்து, அங்கிருந்த பொருட்களை வாங்கிச் சென்றனர். மேலும், அணையின் மேல் பகுதியில் உள்ள மீன் கடைகளிலும் ஏராளமானோர் குவிந்ததால், மீன் விற்பனையும் அமோகமாக நடந்தது. இதனால் மீன் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: