குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது

தென்காசி :  குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளபட்டது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் மெயினருவி, ஐந்தருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் மே மாத இறுதியிலேயே சற்று முன்னதாக துவங்கிவிட்டது. துவக்க நாளன்றே அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம்

இரவு முதல் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலையில் வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்ததையடுத்து தடை விலக்கப்பட்டு அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று காலை முதல் குற்றாலத்தில் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் பெய்தது. இதமான தென்றல் காற்றும் வீசியது. இடையிடையே லேசாக வெயில் தலைகாட்டியது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும்

தண்ணீர் நன்றாக கொட்டியது. பழையகுற்றாலம், புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக இருந்தது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறையாக இருப்பதால் குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர்.

Related Stories: