சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்தனர்

பென்னாகரம்: தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல், ஏற்காடு மற்றும் மேட்டூர் அணைப்பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருவதாலும், கோடை விடுமுறையையொட்டியும்,  சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்குள்ள விடுதிகளில் அறை எடுத்து தங்கியவாறு இயற்கை காட்சிகளை ரசித்து வருகின்றனர். இந்நிலையில், மே தின விடுமுறையையொட்டி, நேற்று சுற்றுலா பயணிகளின் வரத்து மேலும் அதிகரித்தது. ஆயிரக்கணக்கானோர் காலை முதலே வரத்தொடங்கினர். அவர்கள் பரிசல் சவாரி செய்தும், உடலுக்கு ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், மீன் சாப்பிட்டும் பொழுதை களித்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையையொட்டி சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.

இதுகுறித்து பரிசல் ஓட்டிகள் கூறுகையில், காவிரி ஆறு மற்றும் அருவியில் சீராக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் சீசன் களை கட்டியுள்ளது. கோடை விடுமுறை, தொழிலாளர் தின விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களிலிருந்தும் அதிகளவில் வந்திருந்தனர். ஒகேனக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முன்தினம் இரவு நல்ல மழை பெய்தது. இதனால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் சுற்றுலா வந்த பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்றனர்.

இதேபோல், சேலம் மாவட்டத்தின் கோடைவாசஸ்தலமான ஏற்காட்டிலும் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா வந்திருந்தனர். அண்ணா பூங்காவை குடும்பத்துடன் சுற்றிப்பார்த்த சுற்றுலா பயணிகள், ஏரியில் உல்லாச படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். பின்னர், மான் பூங்கா மற்றும் லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், பக்கோடா பாய்ண்ட், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்களை கண்டுரசித்தனர். மேலும், தாவரவியல் பூங்காவையும் குடும்பத்துடன் சுற்றிப்பார்த்தனர். ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் என்பது குறைவாகவே உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக அண்ணா பூங்காவில் கூடுதலாக பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைப்பூங்காவிலும் நேற்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். சேலம் மாவட்டம் மட்டுமின்றி ஈரோடு, பவானி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களிருந்து குடும்பத்துடன் வந்து மேட்டூர் அணை பூங்காவை சுற்றிப்பார்த்தனர். அங்குள்ள பாம்பு பண்ணை, மீன் காட்சியகம், மான் பண்ணையை கண்டுகளித்தனர். முன்தினம் இரவு மேட்டூரில் நல்ல மழை பெய்திருந்த நிலையில் அணைப்பூங்காவில் இதமான சீதோஷ்ண நிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: