கோடை விடுமுறை, கொளுத்தும் வெயில் குமரியில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்

குலசேகரம் : கோடை விடுமுறையையொட்டி குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பயணிகள் கூட்டம் கூட்டமாக குவியத் தொடங்கி உள்ளனர். இதனால் சுற்றுலாத் தலங்கள் களை கட்டத் தொடங்கி உள்ளன. குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் முக்கிய சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வெளி மாநிலம், வெளிநாடுகள், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் இவர்கள், திரிவேணி சங்கமம் கடலில் புனித நீராடிவிட்டு பகவதியம்மனை தரிசனம் செய்கின்றனர்.

பின்னர் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் ஆகியவற்றை பூம்புகார் படகுகளில் சென்று பார்வையிடுகின்றனர். கன்னியாகுமரிக்கு அடுத்தாக பெரிய சுற்றுலா தலம் திற்பரப்பு அருவி. வற்றாத கோதையாறு இங்கு அருவியாக விழுவதால் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் அருவி என்ற பெருமையுடன் விளங்குகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழை காரணமாக தண்ணீர் மிதமான அளவு அருவியில் கொட்டி வருகிறது. காலை முதல் மதியம் வரை கொளுத்தும் வெயில், மதியத்திற்கு மேல் மழை மேகங்கள் சூழ்ந்து சிலநேரங்களில் மழை பொழிவதால் அருவியில் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்படுகிறது. இதனால் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமான சூழ்நிலை ஏற்படுகிறது.

ஏற்கனவே கோடை வெயிலை சமாளிக்க மக்கள் நீர்நிலை சார்ந்த சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திற்பரப்பு அருவியை நாடி வருகின்ற சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகமாக உள்ளது. இதனால் திற்பரப்பு சந்திப்பில் இருந்து அருவி அருகே வாகன நிறுத்தும் பகுதி வரைக்கும் கடுமையான நெருக்கடி நிலவி வருகிறது. இருந்தும் மக்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு குடும்பமாக ஆனந்த குளியல் போடுகிறார்கள்.

மாத்தூர் தொட்டி பாலம்: ஆசியாவிலேயே உயரமான மாத்தூர் தொட்டிபாலத்திற்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் கூட்டமும் தற்போது அதிகரித்துள்ளது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதல் மாலை வரை கட்டுக் கடங்காத கூட்டத்தால் களைகட்டுகிறது. மாலை நேரங்களில் கடுமையான கூட்டம் வருவதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பாலத்தின் அடிப்பகுதி வழியாக பாய்ந்து செல்லும் பரளியாற்றில் நீராடி மகிழ்கின்றனர்.

இந்த பகுதியின் சிறப்பு அம்சமாக சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் அன்னாசிப்பழம், அயனி பழம், தேன் போன்றவை விற்பனையும் சூடுபிடித்துள்ளது. கோடை விடுமுறை தொடங்கிய நிலையில் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கி உள்ளதால் குமரியில் உள்ள சுற்றுலா தலங்கள் களைகட்டி காணப்படுகிறது.

திருட்டு அதிகரிப்பு

திற்பரப்பு அருவியின் மேற்பரப்பில் உள்ள தடுப்பு அணையில், படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்து நிற்கின்றனர்.  இங்கு சுற்றுலா பயணிகள் வருகைக்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் தினசரி திருட்டு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அரங்கேறி வருகிறது. எனவே போதிய போலீசார் பாதுகாப்பில் பணியில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை  விடப்பட்டுள்ளது.

Related Stories: