மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை கோடையிலும் குதூகலிக்கும் குற்றாலம் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

தென்காசி: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும்  மழையால் குற்றாலம் அருவிகளில் குறைவின்றி தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் கடந்த வாரம் வரை அக்னி நட்சத்திர காலத்தைப்போல் வெயில் கொளுத்தி வந்தது. இதனால் குற்றாலம் அருவிகள் வறண்டு காணப்பட்டன. கடந்த சில தினங்களாக பகல் வேளையில் அனலின் தாக்கம் அதிகரித்த போதும் இரவு வேளையில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாக மலைப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக அருவிகளில் குறைவின்றி தண்ணீர் வரத்து உள்ளது. மெயினருவியில் ஆண்கள், பெண்கள் பகுதிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து  பிரிவுகளிலும் தண்ணீர் மிதமாக விழுகிறது. புலியருவி, பழைய குற்றால அருவி,  செண்பகாதேவி அருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் குறைவின்றி தண்ணீர் கொட்டியது. நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிகளவில் வந்திருந்த சுற்றுலா பயணிகள், அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு

வி.கே.புரம்: இதனிடையே பாபநாசம் அகஸ்தியர்அருவியிலும் குறைவின்றி ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் மக்கள் கூட்டமாக வந்து குளித்து  மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான அருவிகள் உள்ளன. இதில் களக்காடு மலைப்பகுதியில் உள்ள அருவிகளில் மழை காலங்களில் மட்டுமே தண்ணீர் விழும். இதே போல் குற்றாலம் அருவிகளில் சீசன் காலங்களில் தண்ணீர் விழும் என்ற நிலையில் பாபநாசத்திலுள்ள அகஸ்தியர் அருவியில் மட்டுமே ஆண்டுமுழுவதும் தண்ணீர் விழும். இதனால் தினமும் இங்கு அதிக அளவில் வருகைதரும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர். கோடை போல் வெயில் கொளுத்திவந்தபோதும் அகஸ்தியர் அருவிகளில் தண்ணீர் குறைவின்றி கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் அனைவரும் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர். விடுமுறை தினமான நேற்று வழக்கத்தைவிட அதிக அளவில் வந்திருந்த மக்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

பல்லாங்குழியான சாலை

பாபநாசம் அகஸ்தியர் அருவி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கும் வனத்துறையினர், சுற்றுலா பயணிகள் மதுபாட்டில், பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் கொண்டுவருகிறார்களா? என்பதை வனச் சோதனை சாவடியில் தீவிர தணிக்கை அருவிக்குச் செல்ல அனுமதிக்கின்றனர்.

இதனிடையே அருவிக்குச் செல்ல கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சாலையானது முறையான பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அவதிப்படும் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் அபாயமும் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அருவிக்குச் செல்லும் சாலையை விரைவாக சீரமைக்க முன்வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

Related Stories: