கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல் ஒரே நாளில் 8 ஆயிரம் பேர் திருவள்ளுவர் சிலையை பார்த்தனர்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் பயணிகள் அதிகாலை சூரியன் உதிக்கும் காட்சியை ரசிக்கின்றனர். முக்கடல் திரிவேணி சங்கமத்தில் குளித்து மகிழ்கின்றனர். பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்கள். கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு மூலம் பார்வையிடுகிறார்கள். காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், காட்சி கோபுரம் ஆகியவற்றுக்கு செல்கிறார்கள். சன்செட் பாயின்ட் கடற்கரை பகுதியில் சூரியன் மறையும் காட்சியையும் பார்த்து மகிழ்கின்றனர்.

கன்னியாகுமரியில் கோடை சீசன் ஏப்.15ம் தேதி தொடங்குகிறது. தற்போது கேரளாவில் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டதை தொடர்ந்து கேரள சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதுபோன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகிறார்கள். நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரித்தது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு மூலம் நேற்று மட்டும் 8 ஆயிரம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டனர்.

சுற்றுச்சூழல் பூங்கா: கன்னியாகுமரி பழத்தோட்டத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா கடந்த சில தினங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இங்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இங்குள்ள மரம் செடி கொடிகள் மற்றும் அருவி போன்ற அமைப்பு, குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். இந்த பூங்காவை பார்வையிட தற்போது இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கன்னியாகுமரி பழத்தோட்டம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையைில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories: