மாவட்டத்தில் குழுக்கள் அமைத்து கண்காணிப்பு காலாவதியான உரம், விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை தனியார் உரக்கடைகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை

சேலம், மார்ச் 25: சேலம் மாவட்டத்தில் காலாவதியான உரம், விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் உரக்கடைகளுக்கு கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், நேற்று கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது. இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.

அப்போது விவசாயிகள் கூறியதாவது: விவசாய வயல்களில் விலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க குழு அமைத்து வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கும் அதேசமயத்தில், மயில்கள் வருவதை கட்டுப்படுத்த வலைகள் வழங்க வேண்டும். நிலஉடமை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பதிவேற்றத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. குறிப்பாக, பட்டாவில் இடம்பெற்றுள்ள நில உரிமைதாரர்கள் பெயரில் குளறுபடிகள் உள்ளன. இதில் திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்த வேண்டும். பயிர்களில் பூச்சி தாக்குதல் உள்ளிட்டவைகள் குறித்து விவசாயிகள் முன்னிலையில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் செய்த பயிர் காப்பீட்டிற்கான இழப்பீட்டு பணம், ₹20 லட்சம் கூட்டுறவு சங்கங்களில் உள்ளது. இதனை விவசாயிகளின் கணக்கிற்கு அனுப்ப வேண்டும். கால்நடை கடன்களுக்கான தவணையை செலுத்த கூறி மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுதானிய ஆண்டு கொண்டாடப்படும் நிலையில், வேளாண் அலுவலகங்களில் சிறுதானிய விதைகளை விற்பனை செய்ய வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

தொடர்ந்து, கலெக்டர் கார்மேகம் பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் நெல் 20,500 எக்டர் பயிர் சாகுபடி பரப்பு இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, தற்போது 24,059 எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சோளம், கம்பு, ராகி உள்ளிட்ட சிறுதானியங்கள் 1,00,637 எக்டர் பயிர் சாகுபடி பரப்பு இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, தற்பொழுது 1,10,466 எக்டர் சாகுபடி என ஒட்டுமொத்தமாக சேலம் மாவட்டத்தில் 2022-2023ம் ஆண்டிற்கு 2,27,277 எக்டர் பரப்பில் வேளாண் பயிர்கள் சாகுபடி பரப்பு இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு, கடந்த மாதம் வரை 2,21,545 எக்டர் பரப்பில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் விவசாயிகளின் கோடை கால சாகுபடிக்குத் தேவையான விதைகள் சம்பந்தப்பட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் கையிருப்பில் உள்ளன.

ரசாயன உரங்களான யூரியா 37,453 மெட்ரிக் டன்னும், டிஏபி 10,398 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 6,332 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 26,929 டன்னும் என மொத்தம் 81,112 மெட்ரிக் டன் உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. மேலும், யூரியா 3,954 மெட்ரிக் டன்னும், டிஏபி 7,166 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 769 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 13,073 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 24,962 மெ. டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகளில் காலாவதியான மருந்து, உரம் மற்றும் விதைகள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனைக் கண்காணிக்க மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கோடை காலத்தில் கால்நடைகளை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்த காணொலிக் காட்சியின் வாயிலாக விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களை விவசாயப் பெருமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, வேளாண் உற்பத்தியைப் பெருக்கி, அதிக வருவாய் ஈட்டி மென்மேலும் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

குறைதீர் கூட்டத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, தோட்டக்கலைத்துறையின் சார்பில் தோட்டக்கலைப் பயிர்களின் பூச்சி நோய் தாக்குதல் தடுப்பு முறைகள் மற்றும் மேலாண்மை குறித்த கண்காட்சி மற்றும் இயற்கை முறையிலான வேளாண் விளைபொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார். பின்னர், \\”நம்ம சிறுதானியம்\\” விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார். கூட்டத்தில், டிஆர்ஓ மேனகா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார், வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், தோட்டக்கலை துணை இயக்குநர் தமிழ்ச்செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நீலாம்பாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: