காசநோய் குறித்து 34,582 பேருக்கு விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி, மார்ச் 25: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்தாண்டு 34,582 நபர்களுக்கு காசநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு, 1996ம் ஆண்டில் இருந்து காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக, மார்ச் 24ம் தேதியை அறிவித்தது. காசநோயானது ஆரம்பக் கட்டத்தில் நுரையீரலை பாதிக்கும். அதன் பின் நரம்பு மண்டலத்தை நோக்கி பரவும். உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் நோய் உருவாகலாம்.

நெஞ்சுவலி, இருமும் போது சளியுடன் ரத்தம் வெளிவருதல், தொடர்ச்சியான இருமல் பிரச்னை போன்ற அறிகுறிகள் காணப்படும். அவ்வப்போது காய்ச்சல், சளி, பசியின்மை, இரவு நேரங்களில் அதிகப்படியான வியர்த்தல், உடல்சோர்வு, சரும நிறம் வெளிறுதல், திடீர் எடை குறைவு போன்ற அறிகுறிகள் உண்டாகும். காசநோயின் தீவிரத்தை புரிந்து கொண்ட உலக சுகாதார நிறுவனம், 1993ம் ஆண்டு, அதை கட்டுப்படுத்துவதற்கான உலகளவிய திட்டத்தை கொண்டுவந்தது. அதன் தொடர்ச்சியாக, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

காசநோய் குறித்த விழிப்புணர்வு தினமான நேற்று, நாடு முழுவதும் காசநோய் குறித்த விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற காசநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, காசநோய் தடுப்பு குறித்த விழிப்புண்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து, காசநோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கினார். இந்த பேரணி, புதிய பஸ் நிலையத்தில் துவங்கி, ராயக்கோட்டை சாலை வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. இதில் ஜீவா நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் 300க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், 10 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காசநோயை கண்டறிய மாவட்டத்தில் உள்ள 45 நுண்ணோக்கி மையங்கள் செயல்படுகிறது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில், காசநோய் கண்டறியும் உயர்தர CBNAAT - TRUNAAT கருவியின் மூலம், சுமார் 34,530 சளி பரிசோதனை செய்யப்பட்டு, 1,264 நுரையீரல் காசநோய் நோயாளிகள் மற்றும் 414 நுரையீரல் சாரா காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. காசநோய் கண்டறியப்பட்ட 1,678 நோயாளிகளில் 1,497 நோயாளிகளுக்கு நேரடி பணபரிமாற்றம் மூலம் மாதம் ₹500 சிகிச்சை காலம் முழுவதும், அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

மேலும், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு காசநோய் கண்டறியும் முகாம்கள் நடைபெற்றதில் சுமார் 34,582 நபர்களுக்கு காசநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அவர்களில் சுமார் 1,152 நபர்களுக்கு சளி மாதிரிகள் பெறப்பட்டதில், 24 நுரையீரல் காசநோயாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உடனடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்று நேரடி குறுகியகால சிகிச்சை முறையில் (டாட்ஸ்) சிகிச்சை வழங்கப்பட்ட மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. வருகிற 2025ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத உலகம் உருவாக்க இலக்கு எய்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்நிகழ்ச்சியில், காசநோய் துணை இயக்குநர் (பொ) டாக்டர். சுகந்தா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், ஷெரீப் மற்றும் மருத்துவ அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: