கடலில் வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க ₹410 கோடியில் தென்பெண்ணை ஆறு உபரிநீர் திட்டம்

தர்மபுரி, செப்.29: தர்மபுரி அருகே தென்பெண்ணை ஆறு உபரிநீர் திட்டத்தை ₹410 கோடியில் நிறைவேற்ற அரசு பரிசீலனையில் உள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தர்மபுரி மாவட்டம் வானம் பார்த்த பூமியாக உள்ளதால், விவசாயத்திற்கு நிலத்தடி நீரையே நம்பி உள்ளது. இதுதவிர கிணறுகள், ஆழ்துளை கிணற்றின் மூலம் குறைந்த அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. காவிரி, தென்பெண்ணை ஆறு தர்மபுரி மாவட்டத்தின் வழியாக சென்றாலும், விவசாயத்திற்கு பலன் இல்லை. இதற்காக அரசு பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை வகுத்துள்ளது. ஒகேனக்கல் உபரிநீர் திட்டம், தென்பெண்ணை உபரிநீர் திட்டம், தூள்செட்டி ஏரி, புலிகரை ஏரி பாசனத்திட்டம், ஜெர்தலாவ் ஏரி, எண்ணெகோல்புதூர், தும்பலஅள்ளி நீர்ப்பாசனத் திட்டம் உள்பட பல்வேறு பாசனத்திட்டங்கள் உருவாக்கி அரசு பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில் சில நீர்ப்பாசனத் திட்டங்கள் செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வகையில், தென்பெண்ணை உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசு பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்கள் வழியாக ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்த தென்பெண்ணை ஆறு, தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே கே.ஈச்சம்பாடி வழியாக செல்கிறது. இதனால் கே.ஈச்சம்பாடி அணை என்று அழைக்கப்படுகிறது. அணையின் வலதுபுற கால்வாய் கே.ஈச்சம்பாடி, பெரமாண்டபட்டி, நவலை, சாமாண்டஅள்ளி, எலவடை, மருதிபட்டி, எம்.வெலாம்பட்டி உள்ளிட்ட கிராம ஊராட்சி பகுதிகள் வழியாக சென்று, எம்.வெலாம்பட்டி பகுதியில் மீண்டும் தென்பெண்ணை ஆற்றுடன் இணைகிறது. கே.ஈச்சம்பாடி அணையில் இருந்து வலதுபுற கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்போது 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது. தென்பெண்ணை ஆற்றில் எத்தனையோ தடுப்பணைகள் இருந்தாலும், மழைக்காலங்களில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.

 

கோடைகாலத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமப் பகுதியில், ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. எனவே, மழைக்காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை தர்மபுரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், தென்பெண்ணை உபரிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும். இந்த திட்டத்தின்படி, மழைக்காலங்களில் ஆற்றில் ஓடும் உபரிநீரை, கம்பைநல்லூர், வெதரம்தரம்பட்டி, பெரமாண்டப்பட்டி, நவலை சின்னாகவுண்டம்பட்டி, பொம்பட்டி, போளையம்பள்ளி, ஆர்.கோபிநாதம்பட்டி, ராமாபுரம், ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, சென்னம்பட்டி, தாசரஅள்ளி, மொரப்பூர் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 60 ஏரிகளில் நீரேற்றும் குழாய்கள் மூலம் கொண்டு சென்று நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ₹410 கோடியில் தென்பெண்ணை ஆற்று உபரி நீரேற்றும் திட்டம் செயல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

 இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தென்பெண்ணை ஆற்று உபரி நீரேற்றும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால், 100 கிராமங்கள் பயனடையும். நிலத்தடிநீர் மட்டம் உயரும். கிணறு, ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் அதிகரிக்கும். இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மானாவாரி விவசாய நிலங்கள் பயனடையும்,’ என்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தென்பெண்ணை ஆற்று உபரி நீரேற்றும் திட்டத்திற்கு ₹410 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது,’ என்றனர்.

Related Stories: