சாலை விரிவாக்க பணிகளை கோட்ட பொறியாளர் ஆய்வு

ஓசூர், ஆக.10: ஓசூர் பகுதியில் உள்ள சாலை விரிவாக்க பணிகளை, நெடுஞ்சாலைத்துறை(கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கிருஷ்ணகிரி கோட்ட பொறியாளர் சரவணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் நாளுக்கு நாள் மக்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், தினசரி போக்குவரத்து ஸ்தம்பிப்பது வாடிக்கையாக உள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களின் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்பேரில், சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஓசூரில் இருந்து தளி செல்லும் சாலை 6 வழிச்சாலையாக மாற்றக்கப்பட உள்ளது. சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் தேவகான பள்ளி வரை இச்சாலை அமைக்கப்பட உள்ளது. மத்திகிரி கூட்டு ரோடில் இருந்து, டிவிஎஸ் தொழிற்சாலை வரை, 7 கி.மீ இஎஸ்ஐயிலிருந்து தளி சாலையில் உள்ள ரயில்வே கேட் வரை சுமார் 5 கி.மீ தூரத்திற்கு சாலை விரிவாக்கம் நடைபெறுகிறது.

அதேபோல், தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஆர்சி சர்ச் அருகே அமைந்துள்ள ரயில்வே மேம்பாலம் பகுதியில் மற்றொரு பாலம் அமைத்து சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. சாலை பணிகள் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு நடைபெறுகிறது. இந்த சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை கிருஷ்ணகிரி கோட்ட பொறியாளர் சரவணன் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். இதுதொடர்பாக ஓசூர் உட்கோட்ட பொறியாளர் செந்தில்குமார், தேன்கனிக்கோட்டை உட்கோட்ட பொறியாளர் திருமால்செல்வன், இளநிலை பொறியாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

Related Stories: