தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் 1800 எக்டேரில் சோளம் அறுவடைக்கு தயார் விவசாயிகள் மகிழ்ச்சி

தா.பழூர், ஆக. 10: தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் 1800 எக்டேரில் சோளம் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் வேளாண் வட்டாரத்தில் சுத்தமல்லி, மூர்த்தியான், சிங்கராயபுரம், கோட்டியால், காடுவெட்டாங்குறிச்சி, அழிசுகுடி, நடுவலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடலை பணி முடிவுற்ற நிலையில் சோளம் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தா.பழூர் வேளாண் வட்டாரத்தில் சுமார் 1800 எக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது சோளம் வளர்ந்து வரும் நிலையில் பூக்கள் பூக்க தொடங்கி உள்ளது. இந்தாண்டு சோளம் பெரிய அளவிலான பூச்சி தாக்கம் இன்றி நல்ல முறையில் மக்காச்சோளம் விளைந்து உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதிகப்படியான வெயிலின் தாக்கத்தால் சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்கத்தால் பெரிய அளவில் மக்கா சோளம் கதிர்கள் மகசூல் இழப்பை ஏற்படுத்தி விவசாயிகள் நஷ்டம் அடைந்து வந்தனர்.

இதனால் சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு காப்பீடு வழங்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கி வந்தது. இந்தாண்டு போதிய அளவு அவ்வப்போது மழைப்பொழிவு இருந்த காரணத்தால், சோளத்தில் படைப்புழு தாக்கம் என்பது இல்லாத நிலை ஏற்பட்டது. மேலும் வேளாண் துறையினர் விவசாயிகளின் நிலங்களுக்கு சென்று ஆய்வு செய்து, அப்போது என்ன மருந்து, உரங்கள் தெளிக்க வேண்டும் என்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வந்தனர். இதனால் விவசாயிகள் போதிய உரம் மற்றும் மருந்துகளை தெளித்து வந்ததாலும் பயிர்கள் பாதிப்பு ஏற்படாமல் நல்ல விளைச்சலை தந்துள்ளது. தற்போது கதிர்கள் வளர்ந்து வரும் தருவாயில், இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் அறுவடை துவங்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: