இராவங்குடி கிராமத்தில்நீர் மேலாண்மை பற்றிய உழவர் பெருவிழா

தா.பழூர், ஆக.8: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் ஜெயங்கொண்டம் ஒன்றியம் இராவங்குடி கிராமத்தில் உள்ள மண்டபத்தில் நீர் மேலாண்மை பற்றிய உழவர் பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகு கண்ணன் வரவேற்று மையத்தின் செயல்பாடு மற்றும் நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி விரைவாக எடுத்துரைத்தார். மையத்தின் பெருந்தலைவர் நடன சபாபதி தலைமை உரை ஆற்றுகையில், இயற்கை வேளாண்மை, நபார்டு திட்டங்கள் மற்றும் நீர் சேகரிப்பு பற்றி விரிவாக எடுத்துரைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் பூமி இயற்கை வள பாதுகாப்பு மையத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஞான சூரிய பகவான், நீர் மேலாண்மை பற்றி தொழில்நுட்ப உரையாற்றுகையில், மழைநீர் சேகரிப்பு முறைகள் பற்றியும், வேளாண்மையில் நீர் சிக்கனம் பற்றியும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில், எரவாங்குடி கவுன்சிலர் ராஜசேகர், ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். மேலும் வேளாண் அறிவியல் மையத் தொழில்நுட்ப வல்லுனர் ராஜா ஜோஸ்லின் வேளாண்மையில் நீர் சிக்கன தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். விவசாயிகளுக்கு நீர் சிக்கனம் மற்றும் மேலாண்மை பற்றி எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வேளாண் அறிவியல் மையம், நெடபிம் மற்றும் தேவி நீர்ப்பாசனம் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேளாண் கண்காட்சிகளை வைத்து தொழில் நுட்பங்களை விரிவாக கூறினர். இவ்விழாவில் 300 க்கும் மேற்பட்ட விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இவ்விழா சிறப்பாக நடைபெற மையத்தின் அலுவலர்கள் கோபால், ரமணி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். மையத்தின் தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா நன்றி கூறினார்.

Related Stories: