சேலம் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை காந்தி ஸ்டேடியத்தில் முன்னேற்பாடுகள் மும்முரம்

சேலம்: குடியரசு தினவிழாவையொட்டி சேலம் வின்சென்ட் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி காந்தி ஸ்டேடியத்தில் முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாளை (26ம் தேதி) நாடு முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவையொட்டி சேலம் வின்சென்ட் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று (24ம்தேதி) காலை போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சேலம் காந்தி ஸ்டேடியத்தில்  முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

காந்தி ஸ்டேடியம் முழுவதும் சுத்தப்படுத்தும் பணி, சுவர் மற்றும் கொடி கம்பத்திற்கு பெயிண்ட் அடிப்பது உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. மெட்டல் டிடெக்டர் கொண்டு போலீசார் ஸ்டேடியம் முழுவதும் சோதனை செய்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டு குடியரசு தினவிழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெறவில்லை.

26ம் தேதி காலை 8 மணிக்கு கலெக்டர் கார்மேகம் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் அவர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். அரசு பணியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களின் பணியை பாராட்டி நற்சான்று வழங்குகிறார். வீர, தீர செயல் புரிந்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்குகிறார்.

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து சிறந்த பொது சேவை புரிந்தவர்களை கவுரவித்து பாராட்டுகிறார். சிறந்த பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார். குடியரசு தினவிழாவையொட்டி மாநகராட்சியில் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் மாவட்டத்தின் முக்கிய அரசு அலுவலகங்களிலும் குடியரசு தினவிழா கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Related Stories: