திருட்டு வழக்கில் கைதானவர்களிடம் பொருட்களை மீட்டு கொடுங்கள்

பெரம்பலூர்,ஜன.25: திருட்டு வழக்கில் கைதானவர்களிடமிருந்து கொள்ளையடித்த பொருட்களை பறிமுதல் செய்யுங்கள் என பெரம்பலூர் மாவட்ட எஸ்பியிடம் காரியானூர் கிராம பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம் காரியானூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் மகாதேவி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெகதீசன் உள்ளிட்டவர்கள் பெரம்ப லூர் மாவட்ட எஸ்பி அலுவலத்திற்கு திரண்டு வந்தனர். அவர் மாவட்ட எஸ்பி மணியிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: எங்கள் காரியானூர் கிராமத்தில் கடந்த 9 மாத காலத்திற்குள் இதே கிராமத்தை சேர்ந்த திவாகர்(20), செல்வக்குமார்(23) ஆகியோர் சேர்ந்து ஏழு வீடுகளில் நகை, வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடந்த வாரம் தனியார் கல்லூரி பேருந்தில் அவர்கள் ஒலி பெருக்கியை திருடும்போது பிடிபட்டனர்.

ஊர் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், கை.களத்தூர் போலீசார் அங்கு வந்து அவர்களை விசாரணைக்கு உட்படுத்தும்போது திவாகர், செல்வகுமார் ஆகிய இருவரும் தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து காரியானூர் கிராமத்தில் கடந்த ஓராண்டாக பல்வேறு வீடுகளில் திருடி வந்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். குறிப்பாக இதில் கைதானவரின் உறவினர்கள் இரவு நேரங்களில் விலங்குகளை வேட்டையாடும் துப்பாக்கியுடன் நடமாடி வருகிறார்கள். எனவே எங்கள் கிராமத்து பெண்களால் இரவு நேரங்களில் உறங்கக்கூட பயமாக இருக்கிறது. இரவு நேரங்களில் அத்துமீறி வீட்டு கதவுகளை தட்டி தொல்லை கொடுத்து வருவதால் பல குடும்பங்களில் பெண்கள் உயிருக்கு பயந்து போராடி வருகின்றனர். கைதானவர்களிடமிருந்து கொள்ளையடித்த பொருட்களை முழுமையாக பறிமுதல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. பொதுமக்களிடம் மனு க்களை பெற்றுக்கொண்ட பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி, விரைந்து கூடுதல் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Related Stories: