திருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை

திருவாரூர், ஏப்.23: திருவாரூர் நகரில் குடிநீர் குழாய் சேதமடைந்து சாலையில் வழிந்தோடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகராட்சி பகுதியில் 20 ஆயிரம் குடியிருப்புகளில் சுமார் 70 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளில் வசித்து வரும் பொதுமக்கள் பலரும் ஆழ்குழாய் கிணறுகள் தங்களது வீடுகளில் அமைந்துள்ள போதிலும் அதில் பெரும்பாலான இடங்களில் நீரானது உப்பு தன்மையுடன் வருவதால் அதனை உபயோகிக்க முடியாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நகரில் நகராட்சி நிர்வாகம் மூலம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உரிய முன் பணம் செலுத்தி இணைப்பினை பெற்றுள்ளனர். மேலும் ஏழை, எளியவர்கள் பயன்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் நகராட்சி மூலம் பொது குடிநீர் குழாயும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த காலங்களில் காலை, மாலை என இருவேளைகளில் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2 வருடத்திற்கு மேலாக காலை ஒருவேளை மட்டுமே குடிநீர் விநியோகமானது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் கடந்தாண்டு பருவமழை போதிய அளவில் பெய்த போதும் மழைநீரை சேகரிக்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காது மற்றும் ஏரி, குளம், குட்டை போன்றவற்றில் நீரினை நிரப்புவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததன் காரணமாக மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் தற்போது அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இந்நிலையில் தற்போது கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் திருவாரூர் நகரில் ராமகே ரோடு உட்பட பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்களில் இருந்து குடிநீர் என்பது வழிந்தோடி சாலைகளில் வீணாக ஓடும் நிலை இருந்து வருகிறது. எனவே இது போன்று குடிநீர் வீணாவதை உடனடியாக தடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: