கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை கடந்தது

கோவை, ஏப். 23:  கோவையில் கொரோனாவால் புதியதாக நேற்று 689 பேர் பாதிக்கப்பட்டதை அடுத்து, மாவட்டத்தில் தொற்று பாதிப்பு 70 ஆயிரத்தை கடந்துள்ளது. கோவை மாவட்டத்தில் இம்மாதம் துவக்கம் முதல் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் 300 பேர் வரை தொற்றினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தினமும் 600 பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டு வருகிறது. மேலும், கடந்த 22 நாட்களில் மட்டும் 11 ஆயிரத்து 15 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று புதிதாக மாவட்டத்தில் 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 262-ஆக உயர்ந்துள்ளது. தவிர, நேற்று ஒரே நாளில் 460 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், மாவட்டத்தில் கொரோனாவுக்கு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 202-ஆக உள்ளது. மேலும், தற்போது கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ, தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 5 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தவிர, நேற்று கோவை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 54 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 710-ஆக உயர்ந்தது.

Related Stories: