தென்னை மரங்களுக்கு வட்டப்பாத்தி அமைத்து தண்ணீர் பாய்ச்சினால் மகசூல் அதிகரிக்கும்

உடுமலை, ஏப்.23:  வட்டப்பாத்தி அமைப்பதன் மூலம் தென்னை மரங்களில் குறைந்த நீரில் அதிக மகசூல் பெற முடியும் என்று வேளாண் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் அதிகளவில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் முறையாக நீர் மேலாண்மை செய்வதன் மூலம் குறைந்த நீரில் அதிக மகசூல் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்று வேளாண்மைத்துறையினர் வழிகாட்டியுள்ளனர். இதுகுறித்து வேளாண் துறையினர் கூறியதாவது: பொதுவாக, தென்னை மரங்களைச் சுற்றி பாத்தி அமைத்து அதில் நீர் பாய்ச்சும் பழக்கம் உள்ளது. பெரும்பாலும், ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்துக்கு தண்ணீர் செல்லும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்யும்போது தண்ணீர் அதிகளவில் விரயமாகும் வாய்ப்பு உள்ளது. மேலும், களைகள் அதிகளவில் முளைத்து நீரையும், சத்துக்களையும் உறிஞ்சிக் கொள்கிறது. அத்துடன் ஒரு மரத்திலிருந்து ஒரு மரத்துக்கு நோய்க்காரணிகள் பரவும் அபாயம் உள்ளது. தென்னை மரங்களைச் சுற்றி வட்டப்பாத்தி அமைத்து நீர்ப்பாசனம் செய்வதன் மூலம் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். அதிக எண்ணிக்கையிலான சல்லி வேர்கள் கொண்ட தென்னை மரங்களின் 90 சதவீத வேர்கள் 2 மீட்டர் ஆர வட்டப் பரப்பளவுக்குள்ளேயே அமைந்திருக்கும். எனவே, தென்னை மரத்தைச் சுற்றி 1.8 மீட்டர் ஆர பரப்பளவில் வட்டப்பாத்திகள் அமைக்க வேண்டும். மேலும், 2 தென்னை மர வரிசைக்கிடையில் பாசன வாய்க்கால் அமைத்து ஒவ்வொரு மரத்தின் வட்டப் பாத்திகளிலும் தனித்தனியே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இதன்மூலம், ஒவ்வொரு மரங்களுக்கும் இடப்படும் உரங்கள் தண்ணீரால் அடித்துச் சென்று வீணாவது தவிர்க்கப்படுகிறது. வட்டப்பாத்திக்கு உட்புறமாக மரத்தைச் சுற்றிலும் ஓலைகள், மட்டைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி மூடாக்கு அமைக்கலாம். இது களைகள் முளைப்பதைத் தடுப்பதுடன் சீரான வெப்ப நிலையைப் பராமரிக்க உதவுகிறது. வட்டப்பாத்தி அமைத்து பாசனம் மேற்கொள்வதால் நீர் வீணாவது தவிர்க்கப்படுவதுடன் குறைந்த நீரில் அதிக மகசூல் பெறுவதற்கு உதவுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: