அதிக விலைக்கு வெளியே விற்பதாக புகார் பாண்லே பூத்தில் ஒரு நபருக்கு 2 மாஸ்க், 1 கிருமிநாசினி விநியோகம்

புதுச்சேரி, ஏப். 23: பாண்லே பூத்களில் குறைந்த விலைக்கு மாஸ்க், கிருமிநாசினிகளை வாங்கி சிலர் வெளியே அதிக விலைக்கு விற்பதாக புகார் வந்ததால் ஒரு நபருக்கு 2 மாஸ்க், 1 கிருமிநாசினி மட்டுமே விற்கப்படுகிறது.புதுச்சேரியில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.  இதனிடையே ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் பாண்லே பாலகங்கள் மூலம் குறைந்த விலையில் முகக்கவசம், கிருமிநாசினி வழங்க கவர்னர் தமிழிசையால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி 70க்கும் மேற்பட்ட பாண்லே பூத்களில் இவை விற்பனைக்கு வந்துள்ளன. அதன்படி பாண்லே பாலகங்களில் ரூ.1க்கு முகக்கவசம், ரூ.10க்கு கிருமிநாசினியும் விற்பனை செய்யப்பட்டது. குறைந்த விலை என்பதால் பாண்லே பாலை வாங்கும் பொதுமக்கள் அவற்றையும் தங்களது வீடுகள், அலுவலகங்களுக்கு வாங்கிச் சென்ற வண்ணம் உள்ளனர். இதில் சிலர் அதிகமாக முகக்கவசம், கிருமிநாசினிகளை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை வெளியே கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். இதுபற்றி அரசுக்கு புகார்கள் வரவே, அடுத்தகட்டமாக ஒரு நபருக்கு 2 மாஸ்க், 1 கிருமிநாசினி மட்டுமே வழங்க பாண்லே நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரே நபருக்கு மீண்டும் மீண்டும் அவற்றை வழங்கவும் தடை போடப்பட்டுள்ளது. பாண்லேவில் முகக்கவசம் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: