நெல்லை, தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 772 பேருக்கு கொரோனா தொடரும் உச்சத்தால் பொதுமக்கள் அச்சம்

நெல்லை, ஏப். 23:  நெல்லை,  தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 772 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. தொடர்ந்து உச்சமடைந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த ஓராண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று முன்தினம் அதிகபட்சமாக 489 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.  இந்த நிலையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் மட்டும் மேலும் 2125 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளின்படி 424 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இதுதவிர தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 99 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. நெல்லை, சாந்திநகர் காவலர் குடியிருப்பில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். முனைஞ்சிப்பட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.நேற்ைறய பாதிப்பில் கூடங்குளம், வடக்கன்குளம், செட்டிகுளம் பகுதிகளில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகர பகுதியை பொறுத்தவரை 4 மண்டலங்களிலும் கொரோனா பரவி உள்ளது. மாநகரில் மட்டும் 244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டோனாவூரில் பிளஸ் 2 மாணவிகள் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சுகாதார மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வட்டார அளவில் பாளையில் 43, வள்ளியூர் 42, களக்காடு, பாப்பாக்குடியில் தலா 27, ராதாபுரம் 25, மானூர் 24, சேரன்மகாதேவி 23, நாங்குநேரியில் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மட்டும்  491 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.  கலிதீர்த்தான்பட்டி பகுதியில் தனியார் ஆலை பகுதியில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடுகச்சிமதில் கிராமத்தில் 7 பேருக்கு பரவியது. அகஸ்தியர்பட்டி கோபால் நகரில் ஒரே முகவரியில் 3 பேருக்கு வைரஸ் ஏற்பட்டுள்ளது. ராதாபுரம் தாலுகா சங்கநேரியில் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1130 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 281 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச கொரோனா பாதிப்பாகும். வட்டார வாரியாக தென்காசியில் 55 பேருக்கும், சங்கரன்கோவிலில் 45 பேருக்கும், கீழப்பாவூரில் 37 பேருக்கும், ஆலங்குளத்தில் 43 பேருக்கும், வாசுதேவநல்லூரில் 20 பேருக்கும், குருவிகுளத்தில் 21 பேருக்கும், கடையநல்லூரில் 13 பேருக்கும், மேலநீலிதநல்லூரில் 10 பேருக்கும், கடையத்தில் 12 பேருக்கும், செங்கோட்டையில் 25 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்ட 10,300பேர்களில் 8,931 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 167 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: