குடியாத்தம் அருகே 2வது நாளாக 23 காட்டுயானைகள் அட்டகாசம் அதிகாலையில் பரபரப்பு

குடியாத்தம்: குடியாத்தம் அருகே 23 காட்டுயானைகள் 2வது நாளாக அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனச்சரகம் தமிழக, ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் வனச்சரகமாக உள்ளது. மேலும், தமிழகத்தின் மிகப்பெரிய வனச்சரகம் குடியாத்தம் வனச்சரகம் ஆகும். இங்கு யானை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்டவை உள்ளது. மேலும் ஆந்திர வனச்சரகத்தில் யானைகள் சரணாலயம் உள்ளது. அவ்வப்போது அங்குள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக குடியாத்தம் பகுதியில் உள்ள கிராமத்திற்குள் நுழைந்துவிடுகிறது. அப்போது ஆந்திர யானைகளும் தமிழக யானைகளும் முட்டி மோதி பிளிறி சத்தமிடும்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 23 யானைகள் ஆந்திர வனச்சரக சரணாலயத்தில் இருந்து வெளியேறி குடியாத்தம் வனப்பகுதிக்குள் வந்து விட்டது. இங்கு தற்போது தமிழக- ஆந்திர யானைகள் முட்டி மோதி சண்டையிட்டு வருகிறது. அவற்றை குடியாத்தம் வனத்துறையினர் விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, 2வது நாளாக நேற்று அதிகாலை 3 மணிக்கு 23 யானைகள் குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி, ஆம்பூரான்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் நுழைந்தது.

அப்போது, ரோந்து பணியிலிருந்த குடியாத்தம் வனத்துறையினர் பட்டாசு வெடித்தும் மேளம் அடித்தும் யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர். இருப்பினும் யானைகளை நிரந்தரமாக விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எந்த நேரத்திலும் யானைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திடும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கடும் பீதியில் உள்ளனர்.

Related Stories: