பட்டப்பகலில் போலீஸ் என கூறி மூதாட்டியிடம் 5 பவுன் நகை நூதன திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

திருவாரூர், ஏப்.20: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த குவளைக்கால் கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி(61). கணவனை இழந்த நிலையில் தனியாக வசித்து வந்த இவர் திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக நேற்று காலை பஸ்சில் வந்து கமலாயம் வடகரை பகுதியில் இறங்கினார்.

பின்னர், ரோட்டில் நடந்து சென்ற கலைச்செல்வியை பைக்கில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் வழிமறித்து தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்தி கொண்டு தனியாக எங்கு செல்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு மருத்துவமனைக்கு செல்வதாக கலைச்செல்வி கூறினார். இந்த பகுதியில் அடிக்கடி வழிப்பறி நடப்பதால் நகைகளை கழட்டி பத்திரமாக எடுத்து செல்லுங்கள் என அவர்கள் கூறியதை நம்பி 2 பவுன் தோடு, 3 பவுன் செயின் ஆகியவற்றை கழட்டி அவர்களிடம் கொடுத்தார். அதனை மர்ம நபர்களில் ஒருவன் பேப்பரில் மடித்து கொடுத்து பத்திரமாக செல்லுங்கள் என கூறியுள்ளான்.

பின்னர், மருத்துவமனைக்கு சென்ற கலைச்செல்வி பேப்பர் பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது பித்தளை வளையல் ஒன்றும் சிறிய அளவிலான கல் ஒன்றும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து, கலைச்செல்வியின் மகன் பாலமுருகன் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பந்தப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் போலீஸ் என கூறி மூதாட்டியிடம் 5 பவுன் நகைகளை 2 மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: