திண்டிவனம் அருகே நள்ளிரவில் பரபரப்பு 5 வீடுகளில் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை தந்தையை தாக்கி மகனிடம் நகை பறிப்பு

திண்டிவனம், ஏப். 20: திண்டிவனம் அருகே 4 வீடுகளில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் 5வது வீட்டில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய போது பொதுமக்கள் திரண்டதால் கொண்டு வந்த கார், திருட்டு பொருட்களை விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் வசித்து வருபவர் ஏழுமலை மகன் குமார் (29). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் குடும்பத்தினருடன் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் இவரது வீட்டுக்கு வந்த கொள்ளை கும்பல் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த 2 பைக்குகளில் ஒரு பைக்கை திருடினர். மற்றொரு பைக் ஸ்டார்ட் ஆகாததால் விட்டுவிட்டனர். இதன் பின்னர் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஓய்வுபெற்ற ஆசிரியர் வரதராஜன் (70) என்பவர் வீட்டில் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து 45 அங்குல எல்இடி டிவியை திருடி அவர்கள் ஏற்கனவே கொண்டு வந்த காரில் வைத்துக்கொண்டனர்.

இதேபோல் அருகே உள்ள ஆசிரியர் லோகநாதன் என்பவர் வீட்டிலும் கொள்ளை முயற்சியில் கொள்ளையர்கள் ஈடுபட்டனர். சத்தம் கேட்டதும் லோகநாதன் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். உடனே மர்ம கும்பல் காரில் தப்பி விட்டது. பின்னர் அந்த கும்பல் கன்னிகாபுரத்தில் விசு (எ) ஞானசேகரன் (60) என்பவர் வீட்டுக்கு கொள்ளையடிக்க சென்றது. அங்கு அவர், அவரது மனைவி வளர்மதி (53) மற்றும் மகன்கள், மருமகள்கள், குழந்தைகள் இருந்தனர். கதவை திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்த நிலையில் மர்ம கும்பல் சர்வீஸ் சாலையில் காரை நிறுத்திவிட்டு வீட்டின் உள்ளே சென்றுள்ளனர். பொருட்களை கொள்ளையடிக்க முயன்ற போது ஞானசேகரன் சத்தம் போட்டார்.

உடனே கொள்ளையர்கள் கையில் துப்பாக்கி, கத்தி, இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்துக்கொண்டு சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். அப்போது அங்கு வந்த ஞானசேகரனின் மகன்கள் இருவரும் கூச்சல் போட்டனர். இதையடுத்து கிராம மக்களும் திரண்டனர். அவர்கள் கையில் தடியுடன் கொள்ளையர்களை விரட்டிய போது கொள்ளையர்கள் காரில் ஏறி தப்பிக்க முயன்றனர். உடனே ஞானசேகரனின் மகன் தடியால் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்தார். உடனே கொள்ளை கும்பல் கார் மற்றும் எல்இடி டிவி ஆகியவற்றை விட்டுவிட்டு தப்பி விட்டனர். காரில் வந்த 5 கொள்ளையர்களில் ஒருவன் பைக்கை திருடி எடுத்துச்சென்ற நிலையில் மற்ற 4 பேரும் கன்னிகாபுரத்தில் பொதுமக்களிடம் இருந்து தப்பிச்சென்று விட்டனர். அவர்கள் கையோடு தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியை எடுத்துச்சென்று விட்டனர். ஆனால் அதற்குரிய குண்டுகள் காரில் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் விழுப்புரம்

எஸ்.பி. ராதாகிருஷ்ணன், திண்டிவனம் டிஎஸ்பி கணேசன், மயிலம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் விட்டுச்சென்ற கார் அரியானா மாநில பதிவு எண் கொண்டதாக இருந்தது. போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில கொள்ளையர்களா? அல்லது அரியானா மாநில பதிவு எண் கொண்ட காரை கடத்தி வந்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. மோப்பநாயும் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து விடப்பட்டது. ஆனால் அங்குள்ள சவுக்குத்தோப்பு வரை சென்ற மோப்பநாய் பின்னர் திரும்பி வந்துவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கார் தற்போது திண்டிவனம் நகர காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மரக்காணம் சாலை காமராஜர் நகரில் பிலவேந்திரன் (60) என்பவரது வீட்டிலும் இந்த கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல் பிலவேந்திரனை தாக்கி, அவரது மகன் அருண்குமார் (31) அணிந்திருந்த 2 பவுன் தங்கச்செயினை பறித்துக்கொண்டு தப்பி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இதுபோன்று அவணம்பட்டு மற்றும் வடஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Related Stories: