கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பு எதிரொலி கூடுதல் பாதுகாப்பு மையங்கள் தயாராகிறது குடியிருப்பு பகுதியில் அமைப்பதால் தொற்று அச்சத்தில் பொதுமக்கள்

நெல்லை, ஏப். 20: கொரோனா தொற்று வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் எதிரொலியாக கொரோனா தடுப்பு கூடுதல் பாதுகாப்பு மையங்கள் தயாராகி வருகின்றன. குடியிருப்பு பகுதியை தேர்வு செய்வதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, 1,876 பேர் அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா பாதுகாப்பு மையங்களில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை, தற்போது நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிவானந்தா மருத்துவமனை, கூடங்குளம் கோவிட் பாதுகாப்பு மையம் ஆகியவற்றில் 3,250 படுக்கை வசதிகள் உள்ளன.

இந்நிலையில் தினமும் கொரோனா தொற்று வேகம் அதிகரித்து வருவதால் புதிய கோவிட் பாதுகாப்பு மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி, நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான பாளை. பஸ் ஸ்டாண்ட் அருண்ஸ் மஹால், நெல்லை மகாராஜநகரில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபம் ஆகியவை கொரோனா பாதுகாப்பு மையங்களாக மாற்றப்பட உள்ளன. இதற்காக இந்த இரு மையங்களையும் வெள்ளை அடித்து தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. கலெக்டர் இந்த மையங்களை பார்வையிட்டு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் படுக்கை வசதிகள் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அதே நேரத்தில் பாளை. பஸ் ஸ்டாண்ட் அருண்ஸ் மஹாலுக்கு அருகே அரசு ஊழியர் குடியிப்புகள், மகளிர் தங்கும் விடுதி, அகில இந்திய வானொலி ஊழியர் குடியிருப்பு, பாளை. சாராள் தக்கர் ெபண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை அமைந்துள்ளன. குடியிருப்புகள் நிறைந்த இந்த பகுதியில் கோவிட் பாதுகாப்பு மையம் அமைக்கும் போது தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. இதேபோல மகாராஜநகர் மாநகராட்சி திருமண மஹாலை சுற்றியும் குடியிருப்புகள் அதிகம் உள்ளது. இங்கு கோவிட் கேர் மையம் அமைக்கும் போது பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே பள்ளிகள், கல்லூரிகளை கொரோனா பாதுகாப்பு மையங்களாக மாற்றும் பட்சத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும் என குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.

Related Stories: