இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் கடைகள், ஹோட்டல்கள் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி

சேலம், ஏப். 20:சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகள், ஹோட்டல்கள் இரவு 9 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும் என, கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்காக, இன்று முதல், நாள்தோறும் இரவு 10 மணிமுதல் மறுநாள் காலை 4 மணிமுடிய, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அப்போது, தனியார், பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன பயன்பாடு அனுமதிக்கப்படாது. வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதியில்லை. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து கடைகள் செயல்படக்கூடாது. அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் இரவு நேர மற்றும் முழு ஊரடங்கு நாட்களில் அனுமதிக்கப்படும்.  

அரசின் வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) இரவு 9 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. விருப்பப்படும் தங்கும் விடுதிகள், தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உடைய தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே, சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கலெக்டர் ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: