சேலம் 4 ரோட்டில் ஆச்சார்யா ஐஏஎஸ் அகாடமி திறப்பு

சேலம், ஏப்.20:சேலம் 4 ரோட்டில் உள்ள எஸ்ஆர்பி டவரில் புதிதாக சிவில் சர்வீஸ் தேர்வுக்கான ஆச்சார்யா ஐஏஎஸ் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. சேலம் திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் தலைமை வகித்தார். சிவா கிரானைட்ஸ் பொதுமேலாளர் சந்திரகுமார், ஸ்ரீவாரி கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் கௌதமன் வரவேற்றனர். ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்பி கலியமூர்த்தி ஐபிஎஸ் கலந்துகொண்டு, ஆச்சார்யா ஐஏஎஸ் அகாடமியை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். பின்னர், சேலம் கந்தாஸ்ரமம் சாலையில் உள்ள எஸ்ஆர்பி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த விழாவில், ஓய்வு போலீஸ் அதிகாரி கலியமூர்த்தி பேசுகையில், ‘‘டெல்லியில் இருப்பது போன்று மிக சிறந்த முறையில் ஆச்சார்யா ஐஏஎஸ் அகாடமி அமைந்துள்ளது. இங்கு நன்கு கற்றுதேர்ந்த, திறமையான வல்லுநர்கள் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சியை அளிக்கின்றனர்.

அதனால், நிச்சயம் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இம்மையம் உருவாக்கும்,’’ என்றார். இதேபோல், திருவள்ளூர் மண்டல போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், சேலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பரமசிவன் ஆகியோரும் பேசினர். அகாடமியின் ஒருங்கிணைப்பாளர் ரவிவர்மன் பேசுகையில், ‘‘கிராமப்புற மாணவர்களுக்காக ஆச்சார்யா ஐஏஎஸ் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. உலக தரம் வாய்ந்த நூலக வசதி, மாணவ, மாணவிகளுக்கு தங்கும் விடுதி வசதி, நவீன வகுப்பறைகள் இருக்கின்றன. இதன்மூலம் சேலம் மற்றும் சுற்றியுள்ள மாவட்ட மாணவ, மாணவிகள் நிச்சயம் பயன்பெறுவார்கள்,’’ என்றார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பெற்றோர், கல்வியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Stories: