இரவு நேர ஊரடங்கை மீறினால் நடவடிக்கை சேலத்தில் 500 போலீசார் கண்காணிப்பு

சேலம், ஏப்.20: சேலத்தில் இரவு நேர ஊரடங்கை மீறுவோர் மீது வழக்கு நடவடிக்கை எடுக்க இன்று முதல் 500 போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று (20ம்ேததி) முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால், இரவில் போலீசார் ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்டு விதிகளை மீறுவோர் மீது வழக்கு நடவடிக்கை எடுக்கவுள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் எந்த வாகனத்திலும் சாலையில் சுற்றித்திரியக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், முக்கிய சாலைகளில் போலீசார், தற்காலிக சோதனைச்சாவடிகளை அமைத்து விதிமீறல் வழக்குகளை பதிவு செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில், ஆட்டையாம்பட்டி, மல்லூர், சங்ககிரி, இடைப்பாடி, மேட்டூர், நங்கவள்ளி, ஓமலூர், ஏற்காடு, வாழப்பாடி, ஆத்தூர், ஏத்தாப்பூர், தலைவாசல், வீரகனூர் என அனைத்து பகுதிகளிலும் எஸ்பி தீபாகனிகர் தலைமையில் இன்று இரவு 400 போலீசார் ரோந்து, சோதனை பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள், ஊரடங்கு விதியை மீறி வாகனங்களில் வரும் நபர்களை பிடித்து வழக்கு நடவடிக்கை எடுக்கவுள்ளனர். இதேபோல், சேலம் மாநகர பகுதியில் கமிஷனர் சந்தோஷ்குமார் தலைமையில் 100 போலீசார், இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். முக்கிய சாலைகளில் சோதனையில் ஈடுபட்டு, விதிமீறி வரும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளனர். அதனால், யாரும் இரவு 10 மணிக்கு பின் அதிகாலை 4 மணி வரை வெளியில் வாகனங்களில் வர வேண்டாம் என போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: