கொரோனா கட்டுப்பாடுகளால் தொழில் பாதிப்பு நிதியுதவி கேட்டு குவிந்த நாட்டுப்புற கலைஞர்கள்

நாமக்கல், ஏப்.20: கொரோனா கட்டுப்பாடுகளால் நாமக்கல் மாவட்டத்தில் தொழில் பாதிப்பிற்குள்ளாகியுள்ள நாட்டுப்புற கலைஞர்கள் நிதியுதவி கேட்டு இசை வாத்தியங்களை முழங்கியவாறு கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாகி வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திருமணங்களில் 100 பேர் மட்டும் கலந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. மேலும், குடமுழுக்கு மற்றும் திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால், அத்தொழிலை சார்ந்த உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாதஸ்வர கலைஞர்கள், கரகாட்டக்காரர்கள், இசை கலைஞர்கள், ஒலிபெருக்கி உரிமையாளர்கள், ஜெனரேட்டர், பந்தல், சாமியானா, பர்னிச்சர், சமையல் பாத்திரங்கள், மேடை அலங்காரம், மணவறை அலங்காரம் உள்ளிட்ட தொழில் செய்பவர்கள் நேற்று இசை வாத்தியங்களை முழங்கியவாறு கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்தனர். பின்னர், நிதியுதவி கேட்டு கலெக்டர் மெகராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: எங்களுடைய தொழிலுக்கு திருவிழா காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அதிகப்படியான வேலை இருக்கும். பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து தொழில் நடத்தி வருகிறோம். நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில், எங்களுடைய தொழில் பாதிப்படையும் வகையில் சில விதிகள் உள்ளன. திருமண விழாக்களில் 100 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற அறிவிப்பானது சாத்தியமில்லை. 50 சதவீத அளவில் மக்களை அனுமதிக்க வேண்டும். கோயில் திருவிழா மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கவேண்டும். கோயில்களை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வை கருத்தில் கொண்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: