கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரம் விற்பனையில் விதி மீறினால் கடும் நடவடிக்கை

கிருஷ்ணகிரி, ஏப்.20: உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் உள்ள உரக்கடைகளில் வேளாண்மை உதவி இயக்குனர் முருகன் ஆய்வு மேற்கொண்டார். இதனை வேளாண்மை உதவி இயக்குனர்(தரக்கட்டுப்பாடு) சுரேஷ்குமார் துவக்கி வைத்து, அனைத்து வட்டாரங்களிலும் சரியான முறையில் ஆய்வு நடைபெறுகிறதா என கண்காணித்தார். அப்போது, உரங்கள் அதன் பையில் உள்ள சில்லரை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது எனவும், அவ்வாறு விற்பனை செய்தால் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தனர்.

மேலும், விவசாயிகளுக்கு சரியான விலையில் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், தவறு செய்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. மாவட்டத்தில் 10  வட்டாரத்திலும் சிறப்பு கண்காணிப்பு குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். ஆய்வின் போது, உர விற்பனை, இருப்பு கிடங்கு உரிமம், விற்பனை ரசீது,  ஆன்லைன் உர இருப்பு விவரம், புத்தக இருப்பு, விற்பனை விலை, தகவல் பலகை, விவசாயிகளின் ஆதார் மூலம் உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை அலுவலர்கள் பிரியா, சத்தீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: