நண்பர்களுடன் குளித்த போது மணக்குடி கடலில் மாயமான மாணவர் சடலமாக மீட்பு

சுசீந்திரம், ஏப்.20: மணக்குடி கடலில் நண்பர்களுடன் குளித்த போது மாயமான கல்லூரி மாணவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். அவரது மகன் மணிகண்டன் (18). கோணம் அரசு பாலிடெக்னிக்கில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் தனது நண்பர்கள் 5 பேருடன் மணக்குடி தூண்டில் வளைவு பகுதியில் கடலில் குளித்துள்ளார். அப்போது திடீரென ராட்சத அலை ஒன்று எழுந்தது. இதில் 6 பேரும் அலையில் சிக்கி தவித்தனர். எதிர்பாராதவிதமாக மணிகண்டனை மட்டும் ராட்சத அலை இழுத்து சென்றது. மற்ற 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இது குறித்து உடனடியாக சுசீந்திரம் காவல் நிலையம், குளச்சல் கடலோர காவல்படை ஆகியவற்றுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சுசீந்திரம் போலீசாரும், கடலோர காவல் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அதைத் தொடர்ந்து உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் வாலிபரை தேடும் பணி தீவிரமாக நடந்தது. பல மணி நேரம் தேடியும் மணிகண்டன் கிடைக்கவில்லை. இதையடுத்து இரவாகி விட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் மீண்டும் நேற்று அதிகாலை மீனவர்கள் ேதடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மணிகண்டன் உடல் இறந்த நிலையில் கிடைத்தது.பின்னர் அவரது உடல் கரைக்கு கொண்டு வரப்பட்டது. மணிகண்டனின் உடலை பார்த்ததும் கடற்கரையில் திரண்டிருந்த உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இது அனைவரையும் கண்கலங்க செய்தது. பின்னர் சுசீந்திரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் வடிவஸ்வரம் பகுதி சோகத்தில் மூழ்கியது.

Related Stories: