இ-பாஸ், சளி பரிசோதனை தொடக்கம் குமரி- கேரள எல்லையில் கட்டுப்பாடுகள் அமல் 12 செக்போஸ்ட்களிலும் போலீஸ் குவிப்பு

களியக்காவிளை, ஏப் 20: தமிழகம் மற்றும் கேரளாவில் கொரோனா 2வது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் இரு மாநில அரசுகளும் மாநில எல்லை பகுதியில் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் மாநில எல்லை பகுதியில் இபாஸ் முறை கட்டாயம் என்று அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து சளி மாதிரி பரிசோதனை மற்றும் இபாஸ் சோதனை நடத்த களியக்காவிளை சந்திப்பில் உள்ள அரசு பள்ளியில் 2 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கும் பணி 2 நாட்களாக நடந்தது. தமிழக அரசு நேற்று முதல் இபாஸ் முறையை அமல்படுத்தி உள்ளது.

அதன்படி நேற்று காலை குமரி -கேரள எல்லை வழியாக களியக்காவிளை வந்த வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை நடைபெற்றது. சோதனையை பலப்படுத்தும் வண்ணம் குமரி- கேரள எல்லை பகுதியான களியக்காவிளை, காக்கவிளை, கொல்லங்கோடு, பளுகல் உள்பட 12க்கும் மேற்பட்ட செக்போஸ்ட்களிலும் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு சுகாதாரதுறை அதிகாரிகளும் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். மேலும் கேரளாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கு களியக்காவிளையில் உள்ள முகாமில் சளி பரிசோதனை நடத்தப்பட்டது. களியக்காவிளை மார்கெட் ரோடு பாரிகேட் மூலம் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு தரப்பில் இஞ்சிவிளை பகுதியில் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். நேற்று ஒரு டிஎஸ்பி தலைமையில் 20க்கு மேற்பட்ட போலீசார் இ பாஸ் உள்ளிட்டவற்றை பரிசோதிக்க பணியமர்த்தப்பட்டனர். நேற்று குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா சென்ற வாகனங்களில் இ பாஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. பெரும்பாலான வாகனங்களில் இ பாஸ் இல்லாததால் இனி வரும்போது இ பாஸ் கொண்டுவரவேண்டும் என்று எச்சரித்து கேரளாவிற்குள் அனுமதித்தனர்.

ெபங்களூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 6 பேர் ஒரு காரில் சுற்றுலாவாக, குமரி மாவட்டம் வந்துவிட்டு நேற்று மதியம் களியக்காவிளை வழியாக திருவனந்தபுரம் செல்ல முயன்றனர். இஞ்சிவிளை அருகே அவர்கள் வாகனத்தை நிறுத்திய கேரள போலீசார் 6 பேர் மீதும் சமூக விலகல் இன்றி பயணித்ததாக வழக்குப்பதிவு செய்தனர். கேரள போலீஸ் சார்பில் வெப் கேமரா அமைக்கும் பணி நேற்று நடந்தது. ஓரிரு நாட்களில் கேமரா மூலம் வாகனங்கள் கண்காணிக்கப்பட உள்ளதாக ேகரள போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: