சித்திரை பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்ய விதைகள் இருப்பு 50 சதவீத மானியத்தில் பெற்று பயன்பெறலாம் கொடியேற்றத்துடன் திருகோடீஸ்வரசுவாமி கோயில் சித்திரை பிரமோற்சவ விழா துவக்கம்

கும்பகோணம், ஏப்.19: தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருக்கோடிக்காவல் கிராமத்தில் வடுகபைரவத்தலமாக போற்றப்படும் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரசுவாமி கோயில் அமைந்துள்ளது. கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன்மாதேவியால் எழுப்பப்பட்ட முதற்கற்கோயில் இதுவாகும், இத்தலத்தில் நூறு ஆண்டுகளுக்குபின் கடந்த 2019ம் ஆண்டு முதன்முறையாக சித்திரை பிரமோற்சவம் நடைபெற்றது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக விழா நடைபெறவில்லை. தற்போது,

நடப்பாண்டிற்கான சித்திரை பிரமோற்சவத்தின் தொடக்கமாக, நேற்று விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமான், திருக்கோடீஸ்வரர், திரிபுரசுந்தரி மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் கொடிமரம் அருகே எழுந்தருள, நாதஸ்வர மேள தாளம் முழங்க, சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் ஜபிக்க, கொடிமரத்திற்கு பலவிதமான அபிஷேகங்கள் நடைபெற்று. சிறப்பு பூஜைகளும் நடந்தது. பின்னர் நந்தியம்பெருமான் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கும், சுவாமி அம்பாளுக்கும் கோபுர ஆர்த்தி செய்யப்பட்டு பிறகு, சுவாமிக்கும், அம்பாளுக்கும் 16 விதமான சோடச உபசாரங்கள் செய்யப்பட்டு பஞ்சார்த்தியும் செய்யப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில், கொரோனா தொற்று குறித்த அரசின் விதிமுறைகளை பின்பற்றி, குறைவான பக்தர்களுடன் கொடியேற்றம் எளிமையாக நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 23ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை திருக்கல்யாண உற்சவமும், 26ம் தேதி (திங்கட்கிழமை) சிருங்கோத்பவ புஷ்கரணியில் சித்திரை தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. பின்னர் 29ம் தேதி (வியாழக்கிழமை) சுத்தாபிஷேகம் மற்றும் ஆஸ்தான பிரவேசத்துடன் சித்திரை பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது.

Related Stories: