அடுத்த கட்டிடத்தில் கம்ப்யூட்டர், ஏசி இயங்கியதால் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகத்தில் குவிந்த திமுகவினர்

கரூர், ஏப். 19: கரூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் திமுகவினர் நேற்றிரவு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்.6ம்தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் உள்ள ஒரு கட்டிட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீலிடப்பட்டு 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், திமுக, அதிமுக கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ஒட்டியுள்ள மற்றொரு கட்டிடத்தின் ஒரு அறையில் மட்டும் ஏசி செயல்பட்டதாகவும், கம்ப்யூட்டர்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் ஆனால், அந்த அறை பூட்டப்பட்ட நிலையில் உள்ளதாகவும் தகவல் பரவியது. இதனால், சம்பவ இடத்தில் திமுகவினர் குவிந்தனர். மேலும், தகவலறிந்த, மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, எஸ்பி சசாங் சாய் உட்பட அனைத்து அதிகாரிகளும் விரைந்து சென்று பார்வையிட்டனர். அறை பூட்டப்பட்ட நிலையில், ஏசி செயல்பட்டதும், கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டில் இருந்தது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது, மாலை நேரத்தில் கம்ப்யூட்டர் வகுப்பு நடத்திவிட்டு எதையும் அணைக்காமல் சென்று விட்டதாகவும், அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில், திருப்தி அடையாத திமுகவினர், பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நாளை (இன்று) காலை திரும்பவும் வந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்த நிலையில் அனைவரும் கலைந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: