நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை

ஊட்டி,ஏப்.19: நீலகிரி மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் தரக்கட்டுபாடு உதவி இயக்குநர் எச்சரித்துள்ளார். மலை மாவட்டமாக விளங்கும் நீலகிரியில் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயமும், சுமார் 7700 ஹெக்டர் பரப்பளவில் கேரட், உருளைகிழங்கு, பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகளின் விவசாயமும் மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர கூடலூர், பந்தலூர் பகுதிகளில் இஞ்சி, குருமிளகு போன்றவைகளும் விளைவிக்கப்படுகின்றன.

விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாகவும், தனியார் விற்பனை நிலையங்கள் மூலமாகவும்  விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் ஒரு சில கடைகளில் உரங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்கள் உர மூட்டைகளில் அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே விற்க வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வேளாண்மை தரக்கட்டுபாடு உதவி இயக்குநர் ஜாகீர் நவாஸ் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் தனியார் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் உட்பட மொத்தம் 220 உர விற்பனை நிலையங்கள் உள்ளன.

 உர விற்பனை செய்யும் போது மூட்டைகளில் அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே உரங்களை விற்பனை செய்திட வேண்டும். உரங்களின் விலை பட்டியல் விவசாயிகளுக்கு தெரியும் படி வைக்க வேண்டும். உரிய படிவங்கள் பெற்று உரங்களை கொள்முதல் செய்வது, விற்பனை ரசீது, விவசாயிகள் கையொப்பம் பெற்று உரங்கள் வழங்குவது, உரங்களை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுேம இருப்பு வைத்திருப்பது தொடர்பாக உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை மீறும் உரம் விற்பனை நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது 800 டன் யூரியா, 610 மெட்ரிக் டன் பொட்டாசியம், 450 டன் கலப்பு உரங்களும் இருப்பில் உள்ளது. மானிய உரங்கள் அனைத்தும் விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும். விவசாயிகள் மண் பரிசோதனை மேற்கொண்டு உரம் பரிந்துரைக்கேற்ப உரங்களை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: