கோவையில் 5 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மட்டுமே இருப்பில் உள்ளது

கோவை, ஏப்.19: கோவையில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இன்று முதல் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலமாகவும், அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். தவிர, முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதனால், தினமும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இதன் காரணமாக தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. தற்போது, கையிருப்பில் 5 ஆயிரம் தடுப்பூசி மட்டுமே உள்ளது. இதனால், இன்று முதல் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. தடுப்பூசி போடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இருப்பு குறைந்துள்ளது.

இது தொடர்பாக கூடுதல் தடுப்பூசி கேட்கப்பட்டது. ஆனால், 5 ஆயிரம் மட்டுமே வந்தது. தற்போது, இந்த 5 ஆயிரம் தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளது. இதனை வைத்துக்கொண்டு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்படும். விரைவில் தேவையான தடுப்பூசி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Related Stories: