அறுவடை முடியும் நிலையில் மரவள்ளி கிழங்கு ஒரு டன்னுக்கு ரூ.1,000 வரை விலை உயர்வு

ஈரோடு, ஏப். 19: மரவள்ளி கிழங்கு அறுவடை முடியும் நிலையில், ஒரு டன்னுக்கு ரூ.1,000 வரை விலை உயர்ந்துள்ளதால், ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஆதங்கத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, கொடுமுடி, கடம்பூர், தாளவாடி ஆகிய பகுதிகளில் மரவள்ளி கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு டிச., மாதம் மரவள்ளி கிழங்கிற்கு அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், முத்தரப்பு கூட்டம் கூட்டப்பட்டு, அதில், ஒரு டன்னுக்கு ரூ.6ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், ஈரோடு மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு பெரும்பாலான பகுதிகளில் அறுவடை முடிந்து விட்டது. இந்நிலையில், மரவள்ளி கிழங்கு ஒரு டன்னுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை விலை உயர்ந்துள்ளது. இதனால், ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஆதங்கத்தில் உள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:  ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் அதிக அளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடியாகும். ஆகஸ்ட் மாதம் சீசன் துவங்கி, மார்ச் இறுதிக்குப்பின் படிப்படியாக அறுவடை குறையும். கடந்த டிச., மாதம் மரவள்ளி கிழங்குக்கு விலை இல்லாததால், ஈரோடு கலெக்டர் கதிரவன் தலைமையில் முத்தரப்பு கூட்டம் கூட்டி, ஒரு டன் ரூ.6,000 என விலை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, முற்றிலும் அறுவடை முடிந்து, குறைந்த அளவு அறுவடை நடக்கிறது. இதில், ஒரு டன் ரூ.6,500 முதல் ரூ.7,000 என்ற விலையில் மரவள்ளி கிழங்கு கொள்முதல் செய்கின்றனர்.

அறுவடை அதிகம் இருந்த காலத்தில் விலை உயர்ந்திருந்தால், விவசாயிகள் பயன் பெற்றிருப்பார்கள். இருப்பினும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கடம்பூர், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, கருமந்தறை போன்ற பகுதியில் தற்போது அறுவடை நடக்கிறது. அங்குள்ள விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும். அங்கு மாவு பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படுவதால், மகசூல் குறைந்து, லாபம் குறையும். ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டும் மாவு பூச்சி தாக்குதல் இருந்ததால், நடப்பாண்டிலும் பூச்சி தாக்குதல் இருக்கும் என்ற அச்சம் விவசாயிகளிடம் உள்ளது.

எனவே, மரவள்ளி நடவின்போது, வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டு, பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம், சீசன் நேரத்தில் விவசாயிகளுக்கு விலை கிடைக்கும் வகையில், ரூ.8ஆயிரமாக விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: