ஆண்டிபட்டி, ஏப். 19: ஆண்டிபட்டி பகுதியில் 15 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நகர்ப்பகுதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குன்னூர் அருகே வைகை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த அரப்படித்தேவன்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதில் போதுமான குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் மாற்று திட்டம் கொண்டு வர அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து வைகை அணையிலிருந்து புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 2018 ம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்த, இந்திட்டம் மூலம் நாளொன்றுக்கு 22 லட்சம் லிட்டர் சுத்திகரப்பு செய்யப்பட்டு நகர்ப்பகுதிக்கு விநியோகிக்கபட்டு வந்தது. அதன்படி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெருக்கள் வாரியாக, 3 தினங்களுக்கு ஓருமுறை குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பேரூராட்சி பகுதியில் குடிநீர் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.