ராமநாதபுரம் ஜிஹெச்சில் கொரோனா பாதிப்பில் இறந்தோர் உடலை ஒப்படைப்பதில் கெடுபிடி

ராமநாதபுரம், ஏப்.19: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்பால் இறந்தோர் உடலை ஒப்படைப்பதில் நிலவும் கெடுபிடியால் உறவினர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 6,913 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 6,520 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர். இதில் 138 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 255 பேர் பாதித்துள்ளனர். தற்போது 245 பேர் சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும் இரட்டை இலக்கத்தில் அதிகரித்து வருகிறது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்தோர் இரண்டாம் அலை கொரோனா தொற்று பரவலில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் தொற்று பாதித்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர், 50 வயது ஆண் என இருவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இம்முறை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்புகள் தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட வில்லை. ஆனால், உயிரிழந்தோர் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் சுகாதாரத்துறை கெடுபிடி செய்து வருகிறது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர் உடல் நலக்குறைவால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரது உடலை ஊருக்கு எடுத்து வர உறவினர்கள் தயாராகினர். இறந்த அந்த முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி என பரிசோதனை முடிவுகள் தெரிவிப்பதாக மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து அந்த முதியவர் உடலை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை அவரது உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்தபோது, அவரது உடலை கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகள்படி துணியால் கட்டுவதற்கு ரூ.3 ஆயிரம் செலவாகும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், வாகனத்தில் உடலை எடுத்துச் செல்ல 25 கி.மீ. தூரத்திற்கு மேல் ஆகும் கூடுதல் செலவை இறந்தவரின் உறவினர்கள் ஏற்க வேண்டும் என திடீர் கட்டுப்பாடுகள் விதித்தனர். இதனால் அவரது உடலை பெற்றுச்செல்ல வந்த உறவினர்கள் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டனர். இதனால் விரக்தி அடைந்த உறவினர்கள் முதியவர் உடலை மிகுந்த கெடுபிடிக்கு இடையில் பெற்றுக்கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராமேஸ்வரம் வந்தனர். மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கைகள் ஒரு புறமிருக்க சுகாதாரத்துறை ஊழியர்களின் செயல்பாடுகள் மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது என பொதுமக்கள் கூறி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை கூடம், தடுப்பூசி போடும் இடங்களில் சமூக இடைவெளி துளியளவும் பின்பற்றப்படவில்லை.

Related Stories: