கொரோனா பரவல் தீவிரம் புளியங்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகள் தடுப்பு வைத்து அடைப்பு

புளியங்குடி, ஏப்.19:  புளியங்குடியில் கொரோனா 2ம் அலை பரவுவதை தொடர்ந்து சுகாதார பணிகள் தீவிரமாகியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டு புளியங்குடி பகுதிகளில் தான் கொரோனா தொற்று அதிகளவில் பரவ தொடங்கியது. இதனால் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு மெயின் ரோடுக்கு வரும் அனைத்து பாதைகளும் தகரத்தால் அடைக்கப்பட்டன. கடைகள் அனைத்தும் மூடப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் பொருட்களும் வீடுகளுக்கே டெலிவரி செய்யப்பட்டன. கொரோனா தொற்று குறைந்தவுடன் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது. தற்போது 2ம் அலை பரவலை  தொடர்ந்து புளியங்குடியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. நேற்று வரை சுமார் 19பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து நகராட்சி சார்பில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முககவசம் அணிவதை கட்டாயமாக்கி, மெயின்ரோடு, கடைகள், தெருக்களில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. டி.என்.புதுக்குடி பகுதியில் உள்ள சிதம்பரவிநாயகர் தென்வடல் தெருவில் 3பேருக்கு கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதி தகரத்தால் அடைக்கப்பட்டன. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் குமார்சிங் கூறுகையில், தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவுவதால்  பொதுமக்கள்  அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கைகளை கழுவுதல், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை   கடைபிடித்து 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: