கொரோனா தொற்று தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு

நாமக்கல், ஏப்.19: கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக, நாமக்கல் மற்றும் நல்லி பாளையத்தில் கலெக்டர் மெகராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் நாள் தோறும் கொரேனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அனைத்து பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல், வெப்ப பரிசோதனை என அனைத்து தரப்பில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கலெக்டர் பார்வையிட்டு வருகிறார்.

இதில் நாமக்கல் நகராட்சி, நல்லிபாளையம் பகுதியில், கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகள் பொதுமக்கள் மற்றும் பேருந்துகளின் நடத்துநர்களால் கடைபிடிக்கப்படுகிறதா என கலெக்டர் மெகராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.மேலும் லாரி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடித்து ஆட்டோக்களை இயக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் பஸ்களில் நின்று கொண்டு பயணம் செல்ல அனுமதி இல்லை, பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் அரசு விதிமுறைகள் கட்டாயம் கடை பிடிக்கப்படுகின்றதா என்று நகராட்சி அலுவலர்களும், போக்குவரத்துதுறை அலுவலர்களும் தினந்தோறும் ஆய்வு செய்ய அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: