கொரோனா பாதிப்பு எதிரொலி போச்சம்பள்ளி சந்தையில் புளி விற்பனை மந்தம்

போச்சம்பள்ளி, ஏப்.19: கொரோனா பாதிப்பு எதிரொலியாக வெளிமாவட்ட வியாபாரிகள் வராததால், போச்சம்பள்ளி வாரச்சந்தையில் புளி விற்பனை சரிந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, மத்தூர் பகுதிகளில் நெடுஞ்சாலை ஓரங்களில் அதிகளவில் புளிய மரங்கள் உள்ளன. மேலும், விவசாயிகளும் தங்கள் விளைநிலங்களில் புளிய மரங்களை பராமரித்து  வருகின்றனர். அதேவேளையில், கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு புளி உற்பத்தி அதிகரித்துள்ளது. தற்போது, சீசன் துவங்கியுள்ள நிலையில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் புளியை மொத்தமாக சேகரித்து போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு மூட்டை மூட்டையாக விற்பனைக்கு எடுத்து வருகின்றனர். வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு புளியை வாங்கிச் செல்கின்றனர்.கடந்தாண்டு ஒரு கிலோ புளி(கொட்டை பிரிக்காதது) ₹40 முதல் ₹50 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு விளைச்சல் மற்றும் வரத்து அதிகரித்துள்ளதால் விலை மேலும் குறைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ₹25 முதல் ₹30 வரையிலும் சுமார் 10 டன் புளி விற்பனையானது. நேற்று கூடிய வாரச்சந்தைக்கு வழக்கம்போல் புளியை எடுத்து வந்தனர். ஆனால், கொரோனா தொற்று காரணமாக வெளிமாவட்ட வியாபாரிகள் யாரும் புளி வாங்க வரவில்லை. இதனால், விற்பனை மந்தமாக இருந்ததால், விற்பனைக்கு கொண்டு வந்த புளியை விவசாயிகள் திரும்ப வீட்டிற்கு எடுத்துச் சென்றதை காண முடிந்தது.

Related Stories: