விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி

காஞ்சிபுரம், ஏப்.18: ஒன்றிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் மோதி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு, உரிய இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாமண்டூரை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் சந்தோஷ்குமார். கடந்த 2015ம் ஆண்டு தனது நண்பர் ராமு (எ) ஹேமச்சந்திரனுடன் பைக்கில் அமர்ந்து சென்றார். அப்போது மாமண்டூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கடலூர் மண்டல அரசு பஸ், பைக் மீது மோதியது. அதில், 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித்த வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி, உயிரிழந்த சந்தோஷ்குமார் குடும்பத்துக்கு ₹14,47,800 இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த 20-12-2017 அன்று உத்தரவிட்டார்.

ஆனால், அரசு போக்குவரத்து கழகம், இதுவரை இழப்பீடு வழங்காமல் தொடர்ந்து தாமதப்படுத்தி வந்தது. இதையடுத்து அசல், வட்டி சேர்த்து ₹20,75,000 தொகை இழப்பீடாக வழங்க வேண்டும். இல்லாவிட்டால், கடலூர் மண்டல அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மாமண்டூர் சென்ற நீதிமன்ற ஊழியர்கள், கடலூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கடலூர் மண்டல அரசு பஸ்சை நிறுத்தி, அதில்  இருந்த பயணிகளை இறக்கிவிட்டு, அதனை ஜப்தி செய்து, காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்.

Related Stories: