தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்திய 95 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர், ஏப்.18:தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்திய 95 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த 6ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தற்போது வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அரசியல் கட்சி ஏஜென்டுகளும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு சிசிடிவி கேமரா வைத்தும் கண்காணிக்கப்படுகிறது.  இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்க, தேர்தல் நாளன்று வாக்காளர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று பரிசோதிக்க தமிழகத்தில் உள்ள 95 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களிலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் வாக்காளர்களின் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்துவிட்டு, கைக சானிடைசர் வழங்கப்பட்டது. பின்னர் வாக்காளர்களுக்கு வலது கை, கையுறை வழங்கப்பட்டது. அதேபோல் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பால் இந்த விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்தது.

இந்நிலையில் தேர்தல் நாளன்று, வாக்குச்சாவடி மைங்களில் பயன்படுத்தப்பட்ட, தெர்மல் ஸ்கேனர் கருவிகளை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட 95 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர்கள் ஒப்படைக்கப்பட உள்ளது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு பயன்படுத்திய 1,783 தெர்மல் ஸ்கேனர் கருவிகள் தமிழ்நாடு மருத்துவ சேவை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவ பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘தேர்தலுக்கு பயன்படுத்திய தெர்மல் ஸ்கேனர் திரும்ப வழங்கும்படி தமிழ்நாடு மருத்துவ சேவை நிறுவனம் கேட்டுள்ளது. அதன்படி, அனைத்து தெர்மல் ஸ்கேனர்களும் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாநிலத்தில் எங்கு தேவை உள்ளதோ அங்கு இந்த தெர்மல் ஸ்கேனர்களை வழங்குவார்கள் என்று தெரிவித்தனர்.

Related Stories: