தில்லையாடியில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் தகரத்தால் தடுப்பு

தரங்கம்பாடி, ஏப்.18: மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் அருகே தில்லையாடியில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பாதிக்கபட்ட பகுதிகள் தகரத்தால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. தில்லையாடி ஊராட்சி பகுதியில் சுமார் 18க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் வாடிதெரு, காந்திநகர் ஆகிய பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தகரத்தை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்று உள்ளவர்களை தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையொட்டி வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார் தலைமையில் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில் தில்லையாடி ஊராட்சி பகுதியை சேர்ந்த சுமார் 82 பேர் முகாமில் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜ், மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: