பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் தவாக வேல்முருகன் பேட்டி

கடலூர், ஏப். 18: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தேவியானந்தல் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் சரஸ்வதி கொலை சம்பவத்தை தொடர்ந்து கடலூரில் அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலந்துகொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: தேவியானந்தல் கிராமத்தில் இளம்பெண் சரஸ்வதி என்பவரை 3 பேர் காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்துள்ளனர். இந்த கொலை குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அரக்கோணம் கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் எனக்கு சிறந்த நண்பர், அவரை இழந்து வாடும் திரையுலகத்திற்கும், அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, உயிரிழந்த சரஸ்வதி குடும்பத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பிலும், நெய்வேலி சபா ராஜேந்திரன் எம்எல்ஏ சார்பிலும் தலா ரூ.1 லட்சம் என ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. இதில், தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் பொறியாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் ஆனந்த், அருள், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: