முகக்கவசம் அணிந்தால் மட்டுமே தென்னம்பாளையம் மார்க்கெட்டில் அனுமதி

திருப்பூர், ஏப். 18: திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையத்தில் காய்கறி, மீன், இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் ஏராளமானவை உள்ளன. இந்த கடைகளுக்கு வருகிற பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இந்த சந்தையில் வழக்கமான நாட்களை விட விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஆயிரக்கணக்கானோர் மார்க்கெட்டில் திரண்டனர். இதில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் நடந்து கொண்டனர். இது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது கொரோனா பாதிப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து,இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தென்னம்பாளையம் காய்கறி, மீன், இறைச்சி சந்தைக்கு ஏராளமானவர்கள் வாகனங்களில் வருவார்கள் என்பதால், சந்தையில் நுழைவு வாயில் பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சந்தையின் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டன. மேலும், மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், முகக்கவசம் அணிந்திருப்பவர்கள் மட்டுமே மார்க்கெட் உள்ளே அனுமதிக்கப்படுவீர்கள். மார்க்கெட் நுழைவுவாயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள வாஷ்பேஷனில் கைகளை சுத்தம் செய்துவிட்டு மார்க்கெட் உள்ளே வரவும். சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: