முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல் தர மறுத்த ஊழியர்கள் வாக்குவாதம்-பரபரப்பு

புதுச்சேரி, ஏப். 17:  புதுச்சேரியில் முகக்கவசம் அணியாமல் எாிபொருள் நிரப்ப வந்தவர்களுக்கு பெட்ரோல் தரமறுத்து ஊழியர்கள் திருப்பி அனுப்பியதால் சில இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது. புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வங்கி பணியாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், ஓட்டல் ஊழியர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இதனிடையே பெட்ரோல் பங்க் ஊழியர்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்வோருக்கு இன்று (17ம் தேதி) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக பெட்ரோல் பங்க்குகளில் சுகாதாரத்துறை செயலரின் அறிவுறுத்தலின்படி ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

மேலும் முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்ப வருபவர்களை அனுமதிக்க மறுத்து வருகின்றனர். அவர்களுக்கு பெட்ரோல், டீசல் போடாமல் அறிவுரை கூறி அனுப்புகின்றனர்.  100 அடி ரோடு, கடலூர் சாலை, விழுப்புரம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஊழியர்களுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காக சென்றவர்களுக்கு மட்டும் பெட்ரோல் விநியோகித்தனர்.சில பங்க்குகளில் வாகன ஓட்டிகளை கடுமையாக எச்சரித்து பெட்ரோல் நிரப்பினர். பெட்ரோல் பங்க் ஊழியர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளால் இருசக்கர வாகன ஓட்டிகளில் முகக்கவசம் அணிந்து செல்வோரின் எண்ணிக்கை கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது அதிகமாகி இருப்பதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: